Home செய்திகள் உலக செய்திகள் ஓ.பி.டி. கட்டணமாக ரூ.68 லட்சம்: டிரம்ப் பரிந்துரை

ஓ.பி.டி. கட்டணமாக ரூ.68 லட்சம்: டிரம்ப் பரிந்துரை

வாஷிங்டன், அக். 8- அமெரிக்காவில் உயர்கல்வி முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தற்காலிகமாகப் பணிபுரிய உதவும் ஓ.பி.டி. (ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்) திட்டத்துக்கான விண்ணப்பக் கட்டணமாக சுமார் 70,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.67.75 லட்சம் முதல் ரூ.68 லட்சம் வரை) வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரை இந்திய மாணவர்கள் உள்பட லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் பயிலும் சர்வதேச மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு அங்குள்ள நிறுவனங்களில் ஓராண்டு வரை பணி பயிற்சி பெற ஓ.பி.டி. திட்டம் அனுமதிக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் படிப்பை முடிப்போருக்கு கூடுதலாக இரு ஆண்டுகள் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பணி அனுபவத்தின் மூலம் சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா உள்ளிட்ட பலர் பின்னர் எச்-1பி விசா பெற்று உயர்ந்த நிலையை அடைந்தனர். புதிய விதிகள் அமலானால், வெளிநாட்டு மாணவர் ஒருவர் முதல்முறையாக ஓ.பி.டி. மூலம் பணியில் சேர விண்ணப்பிக்க 70,000 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் படிப்புகளுக்கான 24 மாத நீட்டிப்புக்கு மேலும் 30,000 டாலர் (சுமார் ரூ.29 லட்சம்) செலுத்த வேண்டும். இதனால் மொத்தம் 3 ஆண்டுகள் பணிபுரிய சுமார் 1 லட்சம் டாலர் (ரூ.96.8 லட்சம்) செலவாகும் நிலை உருவாகும். சட்டப்படி இந்தக் கட்டணத்தை மாணவர்களைச் சேர்க்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களே ஏற்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும், அந்தத் தொகையை மாணவர்கள் அல்லது வேலை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கலாம் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமை இறுதியில் மாணவர்களையே சென்றடையும் அபாயம் உள்ளது.