
சென்னை, அக். 13-
சென்னை கொடுங்கையூரில் மழைநீர் பம்பிங் தொட்டிக்குள் இறங்கிய 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். சென்னையில் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதையொட்டி, மழைநீர் தேங்குவதைத் தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பம்பிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை மாநகராட்சி மண்டலம்-4, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு-34-ல், கொடுங்கையூர் தென்றல் நகர் 3-வது தெருவில் மழைநீரை வெளியேற்றுவதற்காக சுமார் 20 அடி ஆழத்தில் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதில், தலா 25 குதிரைத்திறன் கொண்ட 2 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு மோட்டார் சமீபத்தில் பழுதடைந்தது. அதைச் சீரமைப்பதற்காக வேலூர் மாவட்டம், ஆற்காடு, பெரிய அஸ்தினாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த அஸ்மத் பாஷா (38), மேற்கு தாம்பரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த நவீன்குமார் (34) ஆகிய தனியார் தொழில்நுட்பப் பணியாளர்கள் நேற்று அழைத்து வரப்பட்டனர். இருவரும் காலை 10.30 மணி முதல் மோட்டாரை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில், மோட்டாரைச் சீரமைப்பதற்காக நவீன்குமார் 20 அடி ஆழத் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது விஷவாயு தாக்கியதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அஸ்மத் பாஷா, அவரைக் காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கியபோது அவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். மாதவரம் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துவீரப்பன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இருவரையும் கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, மாலை 4.30 மணியளவில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















