
சென்னை, அக். 15- தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் த.வெ.க. சார்பில் செங்கோட்டையன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், தமிழக அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து, அ.தி.மு.க. வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து பிரபு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இருந்து தார்மிக அடிப்படையில் விலகுவதாக நீதிபதி சஞ்சய் குமார் திடீரென அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “தமிழகம் தொடர்பான ஒரு வழக்கில், அரசு வழக்கறிஞர் தொடர்ந்து ஒத்திவைப்பு கோரி வந்தார். அப்போது, ‘தமிழக முதல்வர் வேகமாக செயல்படுகிறார் என்ற தகவல்கள் வரும் நிலையில், ஒரு வழக்கை ஏன் இத்தனை தாமதமாக நடத்த முயற்சிக்க வேண்டும்?’ என்று இயல்பாக கேள்வி எழுப்பினேன். “ஆனால், எனது கருத்து சமூக வலைதளங்களில் வேறு விதமாக சித்தரிக்கப்பட்டது. தமிழக முதல்வரை நான் பாராட்டியதாக அந்தக் கருத்து பரவியது. எனவே, அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வழக்கை நானே விசாரிப்பது தார்மிக அடிப்படையில் சரியாக இருக்காது. இதனால், இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்” என்றார்.இதையடுத்து, வழக்கு வேறு ஒரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரைக்கப்பட்டது.















