
பெங்களூர்: செப். 25-
நாட்டில் சதித்திட்டம் தீட்டி பயங்கரவாத தாக்குதல் நடத்த முயன்ற 2 பேரை சிக்கபள்ளாபூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சிக்கபள்ளாபூர் பாபூஜி நகரைச் சேர்ந்த சப்பீர் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த சல்மான் ஆகிய இருவரே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆவர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான இருவரும் ‘டெலிகிராம்’ செயலி மூலம் தனியாக குழு ஒன்றை உருவாக்கி, அதில் செல்வந்தர்களை கடத்தி பணம் பறிப்பது குறித்தும், நாட்டின் முக்கிய 3 பிரபல தலைவர்களை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது குறித்தும் ஆலோசித்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பயங்கரவாத செயல்கள் மற்றும் வித்வம்சக தாக்குதல்கள் குறித்து தினமும் அந்த டெலிகிராம் குழுவில் இவர்கள் விவாதித்து வந்த அதிர்ச்சித் தகவலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிக்கபள்ளாபூர் போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த டெலிகிராம் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் பயங்கரவாத சதி செயலில் எப்படி ஈடுபட்டார்கள் இவர்களுக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது இவர்கள் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் வலை அமைப்பு கர்நாடக மாநிலத்தில் மட்டுமா? அல்லது மற்ற மாநிலங்களிலும் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது










