Home செய்திகள் உலக செய்திகள் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி

ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி

ஜப்பான்: செப். 25-
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணிக்காக நவ்நீத், இஷிகா, லால்ரெம்சியாமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. நடப்பு போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 19-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தோனேசியாவை 17-1 என்ற கோல் கணக்கிலும், 3-வது போட்டியில் தாய்லாந்தை 20-1 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி வென்றது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய பெண்கள் அணி ஜப்பானை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், ஜப்பான் அணிக்கு கடும் சவால் அளித்தனர். இந்திய அணியின் நவ்நீத், இஷிகா, லால்ரெம்சியாமி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஜப்பான் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதன் முடிவில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.