
புதுடில்லி: செப். 25-
அணு ஆயுத மிரட்டலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் மண்ணிலிருந்து தொடங்கும் எந்தவொரு விரோத நடவடிக்கையும் இனி போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும், அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் கூறினார்.
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்ததன் மூலம், இனி எந்த எல்லையாலும் இந்தியாவைத் தடுக்க முடியாது என்பதைத் தெரிவித்துள்ளோம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியதன் மூலம், ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளோம். இந்தியா மற்ற நாடுகளுடன் அமைதியான உறவுகளை விரும்புகிறது. அதேவேளையில், நாட்டின் பாதுகாப்பில் யாரும் விளையாடுவதை அனுமதிக்காது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு எல்லையில் புகலிடம் இல்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ், பாலகோட் வான்வழித் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை, தேசிய நலன்களைப் பாதுகாக்கும் திறனும் உறுதியும் இந்தியாவுக்கு உள்ளது என்பதை நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ‘லட்சுமண ரேகையை’ கடந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வருகிறது. ஆனால், அமைதிக்கான இந்தியாவின் விருப்பத்தை பலவீனமாகக் கருதக்கூடாது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்ப வர்களுக்கு எந்த இடமும் பாதுகாப்பான புகலிடமாக மாற முடியாது என்றும் ராஜ்நாத் சிங் எச்சரித்தார். பயங்கரவாதத்தை ஆக்கிரமிப்புக் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், தனது இறையாண்மையையும் பாதுகாப்பையும் காக்கும் திறனும் உறுதியும் இந்தியாவிடம் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் தலைமை உறுதியுடனும் தீர்க்கமான முடிவுடனும் இருந்து, அனைத்து சூழ்நிலைகளிலும் தங்களுக்கு ஆதரவாக நிற்கும் என்பதை ஆயுதப் படைகள் அறிந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.













