Home செய்திகள் தேசிய செய்திகள் வேலைநிறுத்தம்: முன்கூட்டியே சம்பளம்

வேலைநிறுத்தம்: முன்கூட்டியே சம்பளம்

புதுடெல்லி: செப். 25:
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம், ஓய்வூதியம் இன்று (செப். 25) முன்கூட்டியே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 28 முதல் 30-ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மாதத்தின் கடைசி நாளான செப். 30-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வரவு வைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், முன்கூட்டியே ஊதியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதித் துறையின் தலைமை கணக்கு அதிகாரி அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு செப். 25-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப். 26 சனிக்கிழமை, செப். 27 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இதைத் தொடர்ந்து செப். 28 முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, செப். 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு பொதுத்துறை வங்கிகள் செயல்படும் என மத்திய நிதித் துறை அறிவித்துள்ளது. வேலைநிறுத்த நாட்களில் பணப் பரிவர்த்தனைகளுக்கு மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஏடிஎம்களைப் பயன்படுத்துமாறு வங்கி நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன.
மத்திய அரசைப் போலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியத்தை செப். 25-ம் தேதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக், அனைத்து துறைச் செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஊதியப் பட்டியல்களைத் தயாரித்து முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கருவூலக் கணக்கு இயக்குநர் டி.சாருஸ்ரீயும், மாதாந்திர ஊதியம், தினக்கூலி மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களை செப். 25-ம் தேதியே தயாரித்து, மின்னணு தீர்வு வழங்குமாறு அனைத்து ஊதியக் கணக்கு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.