Home மாவட்டங்கள் சென்னை மதுராந்தகம் இடைத்தேர்தல்: விஜய் இன்று பிரசாரம்

மதுராந்தகம் இடைத்தேர்தல்: விஜய் இன்று பிரசாரம்

மதுராந்தகம்: செப். 25-
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய், தனது கட்சி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்காக மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் தொடங்குகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசாரம் என்பதால், கட்சி தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அவற்றுக்கு விஜய் பதிலளித்து வாக்குச் சேகரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் காவல் துறை அனுமதி விதிமுறைகளின்படி பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி, அனுமதி பெற்றவர்களுக்கானதாக மட்டுமே இருக்கும் என்றும், QR குறியீடு கொண்ட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்ட 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நுழைவுச்சீட்டு இல்லாத கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு QR குறியீடு அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை. அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனுமதிச்சீட்டு பெற்றவர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள நேரலைகளில் காணுமாறும் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.