
பெங்களூர்: செப்.25-
பணப் பிரச்சினை காரணமாக மனைவியை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்து, அவரது உடலை 3 நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்து, பின்னர் மெத்தையில் சுற்றி காலி மனையில் வீசிச் சென்ற கணவனை சம்பிகேஹள்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனுசூயா (28) என்பவரே கொலையானவர். கொலை பாதகத்தில் ஈடுபட்ட இவரது கணவர் சாகர் சந்திர ராவத் (32) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்:
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள வெவ்வேறு உணவகங்களில் பணியாற்றி வந்தனர். கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பணப் பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சாகர், மனைவி அனுசூயாவை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப்பின் 3 நாட்களாக மனைவியின் சடலத்தை வீட்டிலேயே வைத்திருந்த குற்றவாளி, பின்னர் உடலை ஒரு மெத்தையில் சுற்றி, சம்பிகேஹள்ளி அருகே உள்ள எம்.எஸ். நகர் அக்ரஹாரா லேஅவுட்டில் உள்ள ஒரு காலி மனையில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.
துணியில் இருந்த ‘டேக்’ மூலம் சிக்கிய கொலையாளி:
இதனிடையே, அந்த காலி மனையை சுத்தம் செய்ய உரிமையாளர் தொழிலாளர்களை அனுப்பியுள்ளார். அப்போது, நாய் கடித்த நிலையில் அழுகிய சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த சம்பிகேஹள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின் போது, சடலத்தில் இருந்த துணியில் ஒரு பிரபல மாலின் ‘டேக்’ இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த டேக்கை வைத்தும், பில் விவரங்களை வைத்தும் இறந்த பெண் யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அதன் தொடர்ச்சியாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், கொலை நடந்து சுமார் 20 நாட்களுக்குப் பிறகு தலைமறைவாக இருந்த கணவர் சாகர் சந்திர ராவதை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.













