Home தலைப்பு செய்தி போலி மருந்து: `கொலை முயற்சி’ வழக்கு

போலி மருந்து: `கொலை முயற்சி’ வழக்கு

பெங்களூர்: செப். 25-
மக்களின் உயிரைக் காக்க வேண்டிய மருந்துகளையே போலி செய்து, அவர்களின் உயிருடன் விளையாடும் கடத்தல் கும்பலுக்கு எதிராக கர்நாடக மாநில அரசு மேலும் கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. போலி மருந்து எனத் தெரிந்தும் அதை விற்பனை செய்து, நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த வழக்குகளை வெறும் ‘மருந்து சட்டத்தின்கீழ்’ மட்டும் சுருக்காமல், ‘கொலை முயற்சி’ போன்ற மிக தீவிர குற்றத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்வது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் யு.டி.காதர் இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் போலி மற்றும் மறுபேக்கிங் செய்யப்பட்ட மருந்துகளின் வலையமைப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அரசு தனது விசாரணை வளையத்தை தீவிரப்படுத்தியுள்ளது. பிடதி அருகே உள்ள பண்ணை வீடு ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடந்த சோதனையில், சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள போலி, காலாவதியான மருந்துகள், பேக்கிங் பொருட்கள், லேபிள்கள் மற்றும் மருந்துகளை நிரப்பும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குறைந்த விலையிலான மருந்துகளை பிற மாநிலங்களில் இருந்து வரவழைத்து, புதிய குப்பிகளில் (Vials) நிரப்பி, அதிக விலையுள்ள உயிர் காக்கும் மருந்துகளின் பெயரில் போலி லேபிள் ஒட்டி விற்பனை செய்ததாக விசாரணையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகளில் Imblaveo, Zavicefta, Xavitaz உள்ளிட்ட பல ஊசி மருந்துகளும் அடங்கும். போலி லேபிள்களில் இருந்த QR/ஸ்கேனிங் குறியீடுகள் இயங்காததும் கண்டறியப்பட்டுள்ளது.
24-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு இணைப்பு:
போலி மருந்துகள் பெங்களூரில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய ‘எஸ்.ஐ.டி’ விசாரணையில், பெங்களூரு மருத்துவமனைகள் மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போலி மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கும்பலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? மருந்துகள் எங்கிருந்து வந்தன? யார் மூலமாக மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களைச் சென்றடைந்தன? பணப் பரிவர்த்தனை எவ்வாறு நடைபெற்றது? போன்ற பல கேள்விகளுக்கு எஸ்.ஐ.டி குழுவினர் விடை தேடி வருகின்றனர். பிடதி வழக்கின் விசாரணைக்காக ஏற்கனவே 6 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
16 உரிமங்கள் ரத்து, 8 சஸ்பெண்ட்:
போலி மருந்து கும்பலுக்கு எதிராக ‘இ.டி.எம்’ அமைப்பும் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. 16 மருந்து விற்பனை மற்றும் விநியோக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 8 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிறுவனங்களில் ‘ஃபைசர்’ (Pfizer) நிறுவனத்தின் பெங்களூரு கிராமப்புற மாவட்ட டிப்போவும் அடங்கும்.
விசாரணைக்கு ஒத்துழைக்காத மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
3 துறைகள் ஒருங்கிணைந்த விசாரணை:
காவல்துறை + இ.டி.எம் + வணிகவரித்துறை ஆகிய 3 துறைகளின் ஒருங்கிணைப்பில் விசாரணையை நடத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி மருந்துகளின் விநியோகப் பாதை மற்றும் நிதிப் பரிவர்த்தனை வலையமைப்பைக் கண்டறிவதில் எஸ்.ஐ.டி கவனம் செலுத்தி வருகிறது.
போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இப்போது இருக்கும் தண்டனைகள் போதுமானவை அல்ல; மக்களின் உயிருக்கு நேரடியாக ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களை மேலும் கடுமையான குற்றவியல் வழக்குகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் காதர் கூறியுள்ளார்.

வலுவடையும் விசாரணை வளையம்:
போலி மருந்து கும்பல் மீது எஸ்.ஐ.டி விசாரணை
காவல்துறை, இ.டி.எம், வணிகவரித்துறை ஒருங்கிணைப்பு
விநியோகப் பாதை மற்றும் நிதி வலையமைப்பின் மீது தீவிர கண்காணிப்பு
16 மருந்து விற்பனை உரிமங்கள் ரத்து
8 நிறுவனங்களின் உரிமங்கள் சஸ்பெண்ட்
விசாரணைக்கு தகவல் அளிக்காதவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
போலி மருந்து விற்பனையை ‘கொலை முயற்சி’ போன்ற தீவிர குற்றமாக கருத அரசு யோசனை
நோயாளியின் உயிரைக் காக்க வேண்டிய மருந்தையே போலி செய்து விற்பனை செய்யும் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு இப்போது கடுமையான சட்ட நடவடிக்கையை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.