
துபாய்: நவ. 13-
ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
புஜைராநகரின் நுழைவுப் பகுதிக்கு அருகிலுள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் சாலையில், நள்ளிரவுக்கு சற்று முன்பு இந்த விபத்து நிகழ்ந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் சென்று கொண்டிருந்ததுடன், பல வாகனங்கள் சாலையில் வரிசையாக நின்றிருந்தன. அப்போது வேகமாக வந்த பெரிய லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முதலில் ஒரு வாகனம் மீது மோதியது. பின்னர் சாலையில் கவிழ்ந்த லாரி, நெரிசலில் நின்றிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.மோதலின் வேகத்தில் லாரியில் தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவி, விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களையும் சூழ்ந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், வாகனங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.தகவலறிந்து புஜைரா காவல்துறை, தீயணைப்புப் படையினர், ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.காயமடைந்த 30 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். உடல் கருகியும் இடிபாடுகளில் சிக்கியும் 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தினரும் இந்தியர்களும் அடங்குவர்.
















