Home செய்திகள் தேசிய செய்திகள் ரயில்வே ஊழியர்களுக்கு78 நாள் தீபாவளி போனஸ்

ரயில்வே ஊழியர்களுக்கு78 நாள் தீபாவளி போனஸ்

புதுடெல்லி, அக். 15-
நாடு முழுவதும் பணியாற்றும் சுமார் 11.4 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 2025-26-ம் ஆண்டுக்கான உற்பத்தித் திறன் அடிப்படையிலான தீபாவளி போனஸாக 78 நாள் ஊதியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மொத்தம் ரூ.2,009.61 கோடி செலவிடப்பட உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்துக்கு இணையான போனஸ் வழங்கப்படும். ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும். இந்த போனஸ் திட்டத்தின் கீழ் ரயில் பாதை பராமரிப்புப் பணியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள் (கார்டுகள்), நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயின்ட்ஸ்மேன்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பிற குரூப் சி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் பயன்பெறுவர். துர்கா பூஜை மற்றும் தசரா பண்டிகைகளுக்கு முன்பாக ஒவ்வோர் ஆண்டும் இந்த தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. ரயில்வே ஊழியர்களை ஊக்குவிப்பதுடன், ரயில்வே துறையின் செயல்திறனை மேம்படுத்த அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்த போனஸ் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2025-26-ம் ஆண்டில் ரயில்வே துறை சிறப்பாகச் செயல்பட்டு, 1,670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. மேலும், சுமார் 741 கோடி பயணிகளையும் கையாண்டுள்ளது. ரயில்வே துறையின் செயல்பாட்டில் ஊழியர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் உற்பத்தித் திறன் அடிப்படையிலான போனஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.