Home செய்திகள் உலக செய்திகள் ஓபன் ஏஐ அலுவலகத்தில் உளவு கருவி: சவுதி ஊழியர் கைது

ஓபன் ஏஐ அலுவலகத்தில் உளவு கருவி: சவுதி ஊழியர் கைது

வாஷிங்டன், அக். 14-
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில், ரகசியமாக ஒலிப்பதிவு கருவி பொருத்தி முக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்ய முயன்றதாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓபன் ஏஐ நிறுவனம் எப்.பி.ஐ.யிடம் புகார் அளித்துள்ளது. ஓபன் ஏஐ பாதுகாப்புக் குழுவினர் கடந்த மாத இறுதியில், அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிநவீன ஒலிப்பதிவு கருவியைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்துல்ரஹ்மான் அல்ஃபோசான் (35) என்பவர் அக்டோபர் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 2025 ஜூலை முதல் ஓபன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விசாரணை முடிந்து தாக்கல் செய்யப்பட்ட முதற்கட்ட அறிக்கையில், அல்ஃபோசான் யு.எஸ்.பி. சாதனத்தை டாய்லெட் பேப்பரில் சுற்றி, நிர்வாகக் கூட்டங்கள் நடைபெறும் அறையில் இருந்த தொலைக்காட்சிக்குள் மறைத்து வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த அறைக்கு அருகே அவர் பலமுறை நடமாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.