
ஜெருசலேம், அக். 21-
நிதி நெருக்கடி காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு, காசா மற்றும் மேற்குக் கரையைச் சேர்ந்த 7 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கி வந்த உணவு உதவியை நிறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வறுமை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், போர், உள்நாட்டுக் கலவரம் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு உதவி செய்து வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் 16 லட்சம் பேருக்கும், மேற்குக் கரையில் 4 லட்சம் பேருக்கும் அந்த அமைப்பு உணவு வழங்கி வந்தது. இந்நிலையில், பல்வேறு உலக நாடுகள் நன்கொடைகளை நிறுத்தியுள்ளதால், உலக உணவு திட்ட அமைப்புக்கு கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, காசாவில் 5 லட்சம் பேருக்கும், மேற்குக் கரையில் 2 லட்சம் பேருக்கும் வழங்கப்பட்டு வந்த உணவு உதவி நிறுத்தப்படுவதாக, உலக உணவு திட்டத்தின் தற்காலிக தலைவர் கார்ல் ஸ்காவ் தெரிவித்துள்ளார்.அடுத்த ஆறு மாதங்களுக்கு காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளில் உணவு உதவியைத் தொடர்ந்து வழங்க 4,270 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான நிதியை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என்றும் கார்ல் ஸ்காவ் வலியுறுத்தியுள்ளார். உடனடியாக நிதி திரட்டப்படாவிட்டால், காசாவில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். நன்கொடைகள் குறைந்துள்ள நிலையில்,
ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உதவியும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. காசா மற்றும் மேற்குக் கரையில் உதவியை நம்பியுள்ள பாலஸ்தீனியர்கள் இதனால் மேலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.















