Home மாவட்டங்கள் சென்னை ரூ.3 லட்சம் மதிப்பூதியத்தை மறுத்த ஓய்வு நீதிபதி

ரூ.3 லட்சம் மதிப்பூதியத்தை மறுத்த ஓய்வு நீதிபதி

சென்னை, செப். 22-
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைக் கண்காணிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன், தனக்கு வழங்கப்படவிருந்த மாதம் ரூ.3 லட்சம் மதிப்பூதியத்தைப் பெற மறுத்துள்ளார். அந்தத் தொகையை சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் பரவியுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு விசாரித்தது. தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அந்த அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்தப் பணிகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான ஏ.செல்வம் மற்றும் வி.பாரதிதாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பணிகளைக் கண்காணிக்கும் இரு நீதிபதிகளுக்கும் தலா மாதம் ரூ.3 லட்சம் மதிப்பூதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், சுற்றுச்சூழல் துறைச் செயலர் காகர்லா உஷாவுக்கு நீதிபதி வி.பாரதிதாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசு சார்பில் தனக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.3 லட்சம் மதிப்பூதியத்தைப் பெற விரும்பவில்லை என்றும், அந்தத் தொகையை தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.