
சென்னை, செப். 22-
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (40). கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வரும் இவரது மனைவி ராஜேஸ்வரி (35), பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு பொன்னேரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியை முடித்த ராஜேஸ்வரி, சுமார் 7.30 மணியளவில் வீட்டுக்குப் புறப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றினார். அதிர்ச்சியடைந்த அவர், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியபடி அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் ஓடினார். அவரை விரட்டிச் சென்ற அந்த நபர், ராஜேஸ்வரி மீது தீ வைத்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. அலறல் சத்தம் கேட்டு வந்த மருத்துவமனை ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பலத்த தீக்காயமடைந்த ராஜேஸ்வரிக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பெண் ஊழியருக்கு தீ வைத்த பிரகாஷ் என்பவர் பொன்னேரி சுடுகாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததால், போலீசார் அங்கு சென்றனர். அவரைப் பிடிக்க முயன்றபோது, எஸ்.ஐ. தமிழரசனை அரிவாளால் வெட்டிவிட்டு பிரகாஷ் தப்ப முயன்றார். அப்போது ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்புக்காக பிரகாஷின் காலில் துப்பாக்கியால் சுட்டார். காயமடைந்த பிரகாஷ் திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரிவாள் வெட்டில் காயமடைந்த எஸ்.ஐ. தமிழரசனுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
















