Home விளையாட்டு ஐபிஎல் ஆட்ட நிர்ணயம்: ரூ.3 கோடி பெற்றதாக முன்னாள் வீரர்

ஐபிஎல் ஆட்ட நிர்ணயம்: ரூ.3 கோடி பெற்றதாக முன்னாள் வீரர்

புதுதில்லி, செப். 22-
2025-ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகவும், ரகசியத் தகவல்களை லண்டனில் உள்ள சூதாட்டத் தரகர்களுக்கு வழங்கி ரூ.3 கோடி சம்பாதித்ததாகவும் முன்னாள் ரஞ்சி வீரர் ரச்சித் பாட்டியா தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு ஐபிஎல் மற்றும் டெல்லி பிரீமியர் லீக் போட்டிகளிலும் ஆட்ட நிர்ணயம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த விவரங்கள் கிரிக்கெட் ஆட்ட நிர்ணய வலையமைப்புகள் குறித்த விசாரணையின்போது வெளியாகியதாக தெஹல்கா செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு டெல்லியில் உள்ள தாகா கிரிக்கெட் அகாடமியில், டிசம்பர் 2025-ல் செய்தியாளர்களை சந்தித்த ரச்சித் பாட்டியா, 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியைச் சேர்ந்த உள்தகவல்களை ஸ்னாப்சாட் மூலம் லண்டன் சூதாட்டத் தரகர்களுக்கு வழங்கி 5 போட்டிகளை நிர்ணயித்ததாகத் தெரிவித்தார். ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.60 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடி பெற்றதாக அவர் கூறினார். மேலும், 2018-19 சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஸ்பாட்-பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்தத் தொடரில் தாம் விளையாடியபோது, பணத்துக்காக திட்டமிட்டு 2 வைட் பந்துகளை வீசியதாகவும், ஒவ்வொரு பந்துக்கும் ரூ.8 லட்சம் வீதம் ரூ.16 லட்சம் பெற்றதாகவும் அவர் கூறினார். அதே 2018-19 சீசனில் நாகாலாந்து ரஞ்சி அணியில் இடம்பெற ரூ.15 லட்சம் லஞ்சம் கொடுத்து, அதன் மூலம் ரஞ்சி அறிமுகம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.