
டெல்லி, அக். 4-
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேரின் தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்ட தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரின் முடிவுக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13-ஆம் தேதி நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதிமுக கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 25 பேரில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக தலைமைக்கு மன்னிப்புக் கடிதம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கோரிய மனுவைத் திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அதனை ஏற்றுக்கொண்ட ஜே.சி.டி.பிரபாகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டு ரத்து செய்வதாக உத்தரவிட்டார். இந்நிலையில், எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மனுவில், கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்ட நிலையில், எந்தவித விசாரணையும் இன்றி நடவடிக்கையை கைவிட்டது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது.













