Home செய்திகள் தேசிய செய்திகள் திருமணத்துக்குப் பின் ஆதாரில் பெயர் மாற்றம்

திருமணத்துக்குப் பின் ஆதாரில் பெயர் மாற்றம்

டெல்லி, அக். 4-
ஆதார் அட்டை இந்திய குடிமக்களின் முக்கியமான டிஜிட்டல் அடையாள ஆவணமாக உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்குதல், அரசு நலத்திட்டங்களைப் பெறுதல், புதிய சிம் கார்டு வாங்குதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அதில் பதிவுசெய்யப்பட்டுள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருப்பது அவசியம். திருமணத்துக்குப் பிறகு பெண்கள் பலர் தங்களது ஆதார் அட்டையில் முகவரியையும், குடும்பப் பெயரையும் மாற்ற விரும்புகின்றனர். சிலர் தந்தையின் பெயருக்குப் பதிலாக கணவரின் பெயரைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்காக கணவன், மனைவி இருவரின் ஆதார் அட்டைகளும் திருமணச் சான்றிதழும் தேவைப்படும். புதுப்பிப்பு நடவடிக்கையின்போது, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள இரு மொபைல் எண்களுக்கும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) அனுப்பப்படும். இதன் மூலம் முகவரியுடன் கணவரின் பெயரையும், மாமனார் வீட்டின் முகவரியையும் சேர்க்கலாம். திருமணத்துக்குப் பிறகு குடும்பப் பெயரை மாற்ற விரும்புபவர்கள் திருமணச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு வழங்கிய திருமணச் சான்றிதழ், அடையாளம், முகவரி மற்றும் உறவுமுறைக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். அந்தச் சான்றிதழில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தால், பெயர் மாற்றத்துக்கு அது மட்டுமே போதுமானதாகும். புகைப்படம் இல்லாவிட்டால், பழைய பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வேறு செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். திருமணம் அல்லது விவாகரத்துடன் தொடர்பில்லாமல் முதல் பெயர், குடும்பப் பெயர் அல்லது முழுப் பெயரை மாற்ற விரும்புவோர் முதலில் உள்ளூர் செய்தித்தாளில் பெயர் மாற்றத்தை விளம்பரப்படுத்த வேண்டும். பின்னர், புதிய பெயரை ஒன்றிய அல்லது மாநில அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட வேண்டும். அரசிதழ் அறிவிப்பு அடையாளச் சான்றாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்; முகவரி, உறவுமுறை அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரமாக அது கருதப்படாது.