Home செய்திகள் தேசிய செய்திகள் 114 ரஃபேல் விமானங்களுக்கு மார்ச்சுக்குள் ஒப்பந்தம்

114 ரஃபேல் விமானங்களுக்கு மார்ச்சுக்குள் ஒப்பந்தம்

புதுடெல்லி, அக். 4-
பிரான்ஸிடம் இருந்து மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். விமானப்படை தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மேலும் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பல்நோக்கு போர் விமானத் திட்டம் தொடர்பாக பிரான்ஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விலை நிர்ணயம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், அதாவது மார்ச் 27-ஆம் தேதிக்குள், இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும். இந்திய விமானப்படையில் போர் விமானப் படைப்பிரிவுகளின் பலத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்காக அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் 36 முதல் 40 போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்க வேண்டியிருக்கும். சுமார் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 114 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அரசுடன் நேரடி ஒப்பந்தம் மூலம் இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்திய விமானப்படையிடம் ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. புதிதாக 114 விமானங்கள் சேர்க்கப்பட்டால், விமானப்படையின் மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 150 ஆக உயரும் என்றும் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்தார்.