
சென்னை, அக். 13-
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்று அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில், அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், அரசுத் துறைச் செயலரின் அனுமதியுடன் அன்பில் மகேஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.இதற்கு நீதிபதி, “ஆளுநரின் அதிகாரம் குறித்து திமுக எப்போது பேசத் தொடங்கியது? ஆளுநரின் அதிகாரத்தை தாடி, மீசை என ஒப்பீடு செய்தல்லவா பேசியிருக்கிறது?” என்று குறிப்பிட்டார். மேலும், அன்பில் மகேஸுக்காக முன்ஜாமீன் மனு எப்போது தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றும் கேட்டார். அதற்கு இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், வழக்கைத் தள்ளிவைக்க வேண்டுமெனவும் அவரது தரப்பில் கோரப்பட்டது.















