Home மாவட்டங்கள் சென்னை தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றம்

தனுஷ் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றம்

சென்னை, அக். 15-
நடிகர் தனுஷின் ரசிகர் மன்றங்கள் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறது. தற்போது தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும், தனுஷ் அரசியலுக்கு வர இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து, தனது ரசிகர் மன்றங்களை மாவட்ட வாரியாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்தார். மேலும், தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தினார். இதற்கிடையே, ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது. இதனால், தனுஷின் அரசியல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார். கோவையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.