Home செய்திகள் தேசிய செய்திகள் ஜெகன் மோகன் ரெட்டி வழக்கு தினசரி விசாரணை

ஜெகன் மோகன் ரெட்டி வழக்கு தினசரி விசாரணை

ஹைதராபாத், அக். 15-
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத் துறை தொடர்பான வழக்கையும் சேர்த்து தினசரி விசாரணை நடத்த ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத் நாம்பல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அவர் ஆந்திர முதல்வராகப் பதவி வகித்த காலத்தில், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்போது அரசுப் பணம் அதிக அளவில் செலவாகிறது எனக் கூறி, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார். நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியதால், வழக்கு விசாரணை மந்தமடைந்தது.ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரு அமைப்புகளும் விசாரித்து வருகின்றன.
இதில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமலாக்கத் துறை சார்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “இதுவரை ஜெகன் மோகன் ரெட்டி தொடர்பான வழக்கை சிபிஐ மட்டுமே விசாரித்து வருகிறது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, எங்கள் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையையும் ஏற்றுக்கொண்டு, சிபிஐ நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தொடர்பான வழக்கையும் சேர்த்து இனி தினசரி விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது.