Home மாவட்டங்கள் சென்னை சிவகாசி அருகே இருதரப்பினர் மோதல்: கல்வீச்சு

சிவகாசி அருகே இருதரப்பினர் மோதல்: கல்வீச்சு

சிவகாசி: அக். 30-
சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் ஃபிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில் கல்வீச்சு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கல்வீச்சு தொடர்பாக இருதரப்பிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நமஸ்கரித்தான்பட்டியில் எம்.புதுப்பட்டி சாலையோரம் உள்ள இடத்தில் ஒரு தரப்பினர் ஃபிளக்ஸ் பேனர் வைக்க முயன்றபோது, அந்த இடம் பட்டா நிலம் எனக் கூறி மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு இருதரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதே இடத்தில் வேறு ஒருவர் ஃபிளக்ஸ் பேனர் வைத்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த முறை தங்களுக்கு ஃபிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி அளிக்காத நிலையில், தற்போது அதே இடத்தில் எவ்வாறு பேனர் வைக்கலாம் என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து நமஸ்கரித்தான்பட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் தலைமையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கூட்டத்தில் கல் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மோதலைத் தடுக்க போலீஸார் லேசான
தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இதையடுத்து மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், விருதுநகர் மாவட்ட எஸ்பி கவுதம் கோயல் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். கல்வீச்சு தொடர்பாக இருதரப்பிலும்
தலா 3 பேர் உள்பட 6-க்கும் மேற்பட்டோர் மீது திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட விளக்கத்தில், “இரு சமூகத்தினரிடையே எந்த மோதலும் ஏற்படவில்லை.
இரவில் ஒரு தரப்பினரிடம் சாலையில் சிலர் கற்களை வீசியதால் லேசான தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம்
ஏற்படவில்லை. இப்பிரச்சினைக்கு சமூகத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.