
பசும்பொன்: அக். 30-
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை நிகழ்ச்சிகள், நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் ஆன்மிக விழாவாக தொடங்கின. நேற்று அரசியல் விழா நடைபெற்றது.
பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
விழா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார்.அதன்பிறகு அவர் மதுரைக்கு வருகிறார். மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.
துணை ஜனாதிபதியின் மதுரை வருகையையொட்டி, மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.















