Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ஈராக் பாதுகாப்புக்கு அச்சம்

அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: ஈராக் பாதுகாப்புக்கு அச்சம்

பாக்தாத், செப். 30- இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுவது, அண்டை நாடான ஈரானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஈராக்கின் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழலை உருவாக்கியுள்ளது. அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை ஈராக் ரகசியமாகத் தயாரிப்பதாகக் கூறி, மேற்காசிய நாடான ஈராக் மீது அமெரிக்கா 2003-ல் போர் தொடுத்தது. அப்போது கைது செய்யப்பட்ட ஈராக் அதிபர் சதாம் உசைன், 2006-ல் தூக்கிலிடப்பட்டார். போருக்குப் பிறகு, ஈராக்கின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கப் படைகள் அங்கேயே தங்கியிருந்தன.அமெரிக்காவில் முந்தைய முறை அதிபராக இருந்த ஜோ பைடன் தலைமையிலான அரசின் காலத்தில், ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேறும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடவடிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் இன்று வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியேற்றம் மேற்காசிய நாடுகளின் அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை ஈரானும், அதன் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடுகின்றன. முக்கிய தளமான அல்-அசாத் விமானப்படைத் தளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், ஈராக் மீதான தனது அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புச் செல்வாக்கை ஈரான் மேலும் விரிவுபடுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஈராக்கின் பாதுகாப்பில் வெற்றிடம் உருவாகலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.