Home செய்திகள் தேசிய செய்திகள் மேகமலை – தீர்ப்பு ஒத்திவைப்பு

மேகமலை – தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: செப். 30-
மேகமலை, மாஞ்சோலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மேகமலையின் பல பகுதிகள் முன்பு வனமாக இல்லை என்றும், தற்போது அவை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், ஒரு பகுதி வனம் என அறிவிக்கப்பட்டால் அது வனம்தான் என்றும், அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை என்றும் கூறினர். மேலும், வனப்பகுதியில் இலவம் பஞ்சுத் தோட்டம் அமைப்பதை அரசு ஏன் ஊக்குவிக்கிறது எனக் கேள்வி எழுப்பினர். இலவம் பஞ்சுத் தோட்டங்களால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் தெரிவித்தனர்.தமிழக அரசு தரப்பில், இலவம் பஞ்சுத் தோட்டங்களை அமைத்துள்ளவர்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்தான் என்றும், வெளியாட்கள் யாரும் தோட்டங்களை அமைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. மேகமலை வனப்பகுதியில் சமீபகாலமாக யாருக்கும் நிலப்பட்டா வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், உரிய பட்டா வைத்திருப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அரசு தரப்பு வாதிட்டது. பட்டா இல்லாமல் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களிடமிருந்து நிலத்தை மீட்க நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பரமேஸ்வர், வனத்தை நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றாலும், இலவம் பஞ்சுத் தோட்டம் அமைக்க அரசு ஊக்குவித்த பின்னரே அதிக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். வெளியிலிருந்து வந்தவர்கள் வனப்பகுதியை ஆக்கிரமிக்க எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.