Home மாவட்டங்கள் பெங்களூர் போலி மருந்து கும்பல்: சென்னை ஃபார்மா நிறுவன பங்குதாரர் கைது

போலி மருந்து கும்பல்: சென்னை ஃபார்மா நிறுவன பங்குதாரர் கைது

பெங்களூரு: செப். 30-
போலி மருந்து தொடர்பான வழக்கில், மற்றொரு முக்கிய குற்றவாளியை சிறப்பு புலனாய்வுப் படை அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர்.
கும்பலின் தலைவன் பிரசாந்த் கைதானதைத் தொடர்ந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சென்னைச் சேர்ந்த ஃபார்மா பங்குதாரர் பாலாசுப்பிரமணியனை கைது செய்த சிறப்பு புலனாய்வுப் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பாலாசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேல் விசாரணைக்காக அவரை 7 நாட்கள் சிறப்பு புலனாய்வுப் படையின் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலாசுப்பிரமணியன் ‘டி.எம். ஃபார்மா’ மருந்து நிறுவனத்தில் கும்பலின் தலைவன் பிரசாந்துடன் பங்குதாரராக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் பாலாசுப்பிரமணியனுக்கு பங்கு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
போலி மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனையின் பின்னணியில் செயல்பட்ட முழு வலையமைப்பையும் கண்டறிய சிறப்பு புலனாய்வுப் படை அதிகாரிகள் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். கைதான குற்றவாளியிடம் இருந்து இந்த கும்பலின் பிற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் இயங்குமுறை குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.