Home செய்திகள் தேசிய செய்திகள் பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையர்: கார்கே

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையர்: கார்கே

புதுடெல்லி, செப். 30-
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பாஜக ஆட்டி வைக்கும் கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகள் தன்னிச்சையானவை, தவறானவை என்று சக தேர்தல் ஆணையர்கள் இருவரே விமர்சித்துள்ளனர். ஆளும் கட்சிக்கு சாதகமாகச் செயல்படும் வகையிலேயே அவரது நடவடிக்கைகள் இருந்தன. இது தற்போது நாடு முழுவதும் தெரிந்த விஷயமாகிவிட்டது. அவர் பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டுள்ளார். எனவே, அவர் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை; அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார். காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் 5 முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் கார்கே தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்கள் தொடர்பான தரவுகளையும் பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்பது முதல் கோரிக்கை. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட அனைவருக்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியலை எளிய வடிவிலும், உரிய நேரத்திலும் வழங்க வேண்டும். தீவிரமான முறைகேடுகள் கண்டறியப்படும் இடங்களில் குறிப்பிட்ட காலவரையறைக்குள் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். தகவல்கள் மறைக்கப்படுகின்றன என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாத வகையில் தேர்தல் நடைமுறைகளை முழுமையாக வெளிப்படையானதாக மாற்ற வேண்டும் ஆகியவை மற்ற கோரிக்கைகள் என அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் தருவதாகக் கூறப்படுவதால், தலைமைத் தேர்தல் ஆணையருடன் இணைந்து அழுத்தம் கொடுத்ததற்காக பிரதமர் மோடியும் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.