
ஸ்ரீநகர்: செப். 30-
ஜம்மு-காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
புட்காம் மாவட்டத்தின் கோராக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியதாகத் தேடப்பட்டு வந்த அந்த நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த சுலைமான் ஷா என்கிற மூசா எனப் பாதுகாப்பு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து, வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.













