
ஜெருசலேம், அக். 4- துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தில் பயணிகளை காப்பாற்ற உதவிய இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாரை, சிறப்பு விருந்தினராக இஸ்ரேலுக்கு வருகை தருமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்தார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு, கடந்த செப்., 30ல் சென்ற, ‘பிளை துபாய்’ நிறுவனத்தின் விமானத்தை, அதன் துணை விமானி கடத்த முயன்றார்.அதை தடுத்த, நம் நாட்டின் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மிட் மச்சார், கடுமையாக தாக்கப்பட்டார். கடுமையாக காயமடைந்த நிலையிலும், 174 பயணியர் உட்பட, விமானத்தில் இருந்த 180 பேரின் உயிரை விமானி ஸ்மிட் மச்சார் காப்பாற்றியுள்ளார். இதனால் ஸ்மிட் மச்சாருக்கு உலக அளவில் பாராட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போனில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: நீங்கள் இந்தியா மற்றும் இஸ்ரேலின் வீரமிக்க மக்களின் உண்மையான நாயகன்; மேலும் நீங்கள் ஒட்டுமொத்த உலகின் நாயகன்.
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் தீப்பந்தம் ஏற்ற உங்களை அழைக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்திய விமானி ஸ்மித் மச்சார் மற்றும் அவரது வீரமிக்க சகாக்கள், 9/11 தாக்குதலுக்கு இணையான ஒரு பெரும் பேரழிவைத் தடுத்து நிறுத்தினர் என பிரதமர் நெதன்யாகு பாராட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.














