
லக்னோ, அக். 14- உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகள் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகின்றனர். ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் உள்ள செல்வாக்குமிக்க அரசியல் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர், மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை அவர்களின் சமூக வலைதளச் செயல்பாடுகளிலும் காண முடிகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான ராஜ்நாத் சிங்கின் மூத்த மகன் பங்கஜ் சிங், பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார். இளைய மகன் நீரஜ் சிங்கை பாஜக சார்பில் களமிறக்க ராஜ்நாத் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாக கட்சியில் செயல்பட்டு வரும் நீரஜ், சமீபத்தில் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானாவின் மகன் கரண் மஹானாவும் பாஜக வேட்பாளர் வாய்ப்பைத் தேடி வருகிறார். எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சதீஷ் மஹானா, கட்சிப் பணிகளிலும் மக்கள் தொடர்புப் பணிகளிலும் மகனை ஈடுபடுத்தி வருகிறார். பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணா ஜோஷி, தனது மகன் மயாங்க் ஜோஷிக்கு வாய்ப்பு கோருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை தங்கள் கட்சிக்கு அழைத்து வேட்பாளராக்க சமாஜ்வாதி விரும்புகிறது. ரீட்டா, உத்தரப் பிரதேச முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் மகள் ஆவார். 2019-ல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறிய மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், தனது வழக்கறிஞர் மகளைத் தேர்தல் மூலம் அரசியலில் களமிறக்க முயன்று வருகிறார்.
சமாஜ்வாதி கட்சியிலும் வாரிசுகள் போட்டியிடத் தயாராகின்றனர். அயோத்தி எம்.பி. அவ்தேஷ் பிரசாதின் மகன் அஜித் பிரசாத், இடைத்தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். கடோஹத்தி தொகுதி எம்.பி. லால்ஜி வர்மா, மருத்துவரான மகள் சாயாவை களமிறக்கத் தயாராகிறார். கெராகாட் எம்.எல்.ஏ. துஃபானி சரோஜின் மகன் தனஞ்செயும் அரசியலில் ஈடுபடுத்தப்பட உள்ளார். அவரது மகள் பிரியா சரோஜ் எம்.பி.யாக இருந்து, சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மறைந்த தலைவர்களின் வாரிசுகளும் வாய்ப்பு கோருகின்றனர். ஜூலையில் 90-வது வயதில் காலமான மூத்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ. ஆலம் பாடியின் மகன் முஸ்தஜாப் ஆலம், நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். சமாஜ்வாதி முன்னாள் அமைச்சர் ராம் கோவிந்த் சவுத்ரியின் மகன் ரஞ்சித் சவுத்ரி, பன்ஸ்திஹ் தொகுதியில் வாய்ப்பு கேட்கிறார். சமீபத்தில் காலமான பாஜக எம்.எல்.ஏ. சோட்டே லாலின் மகன்களில் ஒருவரை ஃபதேஹாபாத் தொகுதியில் நிறுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.














