
சென்னை, அக். 14-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக 95 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ரெயில் டிக்கெட் முன்பதிவு, பயண நாளுக்கு 60 நாட்களுக்கு முன்பே தொடங்குகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ததால், பல ரெயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. இதனால், ஏராளமான பயணிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.
அவர்கள் தீபாவளி சிறப்பு ரெயில்கள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தெற்கு ரெயில்வே சார்பில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு 85 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. நடப்பாண்டு, அதைவிட சற்று கூடுதலாக 95 சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், பயணிகளின் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில் மாறுபடலாம். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சிறப்பு ரெயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்து வருவதால், கூடுதலாக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்களை இயக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும். இதுதொடர்பான பரிந்துரை விரைவில் ரெயில்வே வாரியத்துக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.















