Home செய்திகள் தேசிய செய்திகள் சீனாவுடன் இயல்பான உறவுக்கு எல்லை ஸ்திரத்தன்மை: ஜெய்சங்கர்

சீனாவுடன் இயல்பான உறவுக்கு எல்லை ஸ்திரத்தன்மை: ஜெய்சங்கர்

புதுடெல்லி, அக். 14- இந்தியாவுடன் இயல்பான உறவை சீனா விரும்பினால், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்று மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் “புதிய பொருளாதார கருத்தரங்கு” என்ற பெயரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,
இந்தியா–சீனா உறவு மற்றும் எல்லை நிலவரம் குறித்து விளக்கமளித்தார்.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லை இல்லை. எல்லைப் பகுதி தொடர்பான விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்று பல தசாப்தங்களாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், 1975-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 45 ஆண்டுகள் எல்லையில் ரத்தம் சிந்தும் வகையிலான மோதல்கள் நடைபெறவில்லை என்று ஜெய்சங்கர் கூறினார். இந்தக் காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் வளர்ச்சி பெற்றன. அதற்கு முன்பு, கடைசியாக 1975-ம் ஆண்டில்தான் உயிரிழப்பு ஏற்படும் அளவிலான மோதல்கள் எல்லையில் நடந்தன என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் இரு நாடுகளும் தொடர்ச்சியான எல்லை விவகாரங்களை எதிர்கொண்டன. அதன் விளைவாக இரு தரப்பையும் சேர்ந்த பல வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லையில் அமைதி பாதிக்கப்பட்டால், அதன் தாக்கம் இரு நாடுகளின் உறவுகளிலும் ஏற்படும் என்பதை அப்போது தெளிவாகக் காண முடிந்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.எல்லையில் அமைதி மீட்கப்படும் வரை இந்த நிலை நீடித்ததாகவும் அவர் கூறினார். எல்லை விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும், நிலைமையைச் சீர்படுத்தவும் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார். எனவே, இந்தியாவுடன் இயல்பான உறவை சீனா விரும்பினால், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.