
புதுடெல்லி, அக். 14- அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 5 நாள் பயணமாக அக். 17-ம் தேதி இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது அவர் மும்பை, ஜாம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல உள்ளார். இதன்மூலம், மார்கோ ரூபியோ இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்தியப் பயணத்தின்போது மூத்த அதிகாரிகளைச் சந்தித்து மார்கோ ரூபியோ ஆலோசனை நடத்துகிறார். இந்தியா–அமெரிக்கா இடையேயான ராஜதந்திர உறவுகள், உலகளாவிய மற்றும் பிராந்திய அளவில் நிலவும் விவகாரங்கள், எரிசக்தி தொடர்பான அம்சங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன. மேலும், தொழில் அதிபர்களையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புகளில் வர்த்தக முதலீடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா மீது அமெரிக்கா 100 சதவீத வரி விதித்துள்ள சூழலில், மார்கோ ரூபியோவின் இந்தியப் பயணம் நடைபெறுகிறது. இதனால், அவரது பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது முடங்கியுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய வருகை இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார விவகாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணத்தின்போது நடைபெறும் அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்புகள் மூலம், இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் எரிசக்தி தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.















