
துபாய், அக். 3-
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிளைதுபாய் விமானத்தை வீழ்த்த சதி செய்ததாகக் கூறப்படும் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்ஹமாமி (29) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் இந்திய முதன்மை விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் மீது அவர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
துணை விமானி விமானத்தைக் கடத்த முயன்றதாகவும், அதை இந்திய விமானியான கேப்டன் ஸ்மிட் மச்சார் முறியடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த துணை விமானியை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் (யுஏஇ) ஒப்படைத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. ஹமாம் அல்ஹமாமி, கடந்த 2024-ஆம் ஆண்டு ‘ஓமன் ஏர்’ நிறுவனத்தில் பயிற்சி துணை விமானியாக இருந்தபோது, அவரிடம் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான சிந்தனைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் இயக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டு, அவர் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டார். பின்னர் நிர்வாகப் பணிகளில் மட்டுமே அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.















