
ரியாத்: அக். 14-
ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 இந்தியர்கள் காயமடைந்தனர்.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அக். 17-ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்காக இந்தியத் தூதரகம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் மூலம் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தூதரகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் தேவையான தகவல்களுக்கு +966-11-488469 என்ற தொலைபேசி எண்ணிலும், +966-536216082 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஜெட்டா மற்றும் மதீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய உம்ரா யாத்ரீகர்களுக்கும் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத்தூதரகம் இதேபோன்ற அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பயணத் திட்டம் தொடர்பாக நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.













