
சென்னை: செப். 30-
கோவையில் குட்கா கடத்தலைத் தடுக்க உயிரைப் பணயம் வைத்து காரின் மேற்கூரையில் சுமார் 40 கி.மீ. தொலைவு பயணம் செய்த தலைமைக் காவலர் ம.வேல்முருகனை, முதல்வர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டி பரிசு வழங்கினார்.
கோவை அருகே கோவில்பாளையம் பகுதியில் கடந்த 27-ம் தேதி காலை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலப் பதிவெண் கொண்ட சொகுசு காரை தலைமைக் காவலர் வேல்முருகன் தலைமையிலான போலீஸார் சோதனையிட்டனர். காரில் 3 பேர் இருந்ததுடன், பின்புறம் சில மூட்டைகளும் காணப்பட்டன. போலீஸார் சோதனை செய்துகொண்டிருந்தபோது, கார் திடீரென வேகமாகப் புறப்பட்டது. உடனடியாக வேல்முருகன் காரின் மீது குதித்து, அதன் மேற்கூரையில் படுத்தபடி பிடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாகச் சென்றது. விளாங்குறிச்சி, கணியூர் சுங்கச்சாவடிகளிலும் அது நிற்காமல் சென்றது. இதையடுத்து கோவை போலீஸார், திருப்பூர் மாவட்ட போலீஸாரை உஷார்படுத்தினர். அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தப்பட்டது. அதில் கார் சிக்கியதும், அதை நிறுத்திவிட்டு 3 பேரும் தப்பியோட முயன்றனர். அங்கு காத்திருந்த போலீஸார் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து, காரின் மேற்கூரையில் இருந்த வேல்முருகனையும் மீட்டனர்.விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் (20), ராஜேஷ் (23), பாபாதரம் (27) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. காரில் இருந்த 233 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, வேல்முருகனை தலைமைச் செயலகத்துக்கு அழைத்த முதல்வர் விஜய், அவரது துணிச்சலைப் பாராட்டி பரிசு வழங்கினார். பணியின்போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உடனிருந்தார்.













