
பெங்களூரு, அக். 14-
ஜோதிடம் சொல்வதாகக் கூறி 62 வயது மூதாட்டியை நம்ப வைத்து, ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த தந்திரக்கார ஜோதிடரைக் கைது செய்வதில் பேட்டராயபுர போலீசார் வெற்றி பெற்றுள்ளனர்.
கைதான குற்றவாளி வெங்கடேஷ் என்பவரிடமிருந்து, அவர் அந்தப் பெண்ணிடம் பெற்ற சுமார் 300 கிராம் தங்க நகைகளில் 200 கிராம் நகைகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி செய்த பிறகு, விபத்து நடந்துவிட்டதாகப் பொய்க்கதை கூறிய குற்றவாளி, செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட விடியோவை அந்தப் பெண்ணுக்கு அனுப்பிவிட்டு, செல்போனை அணைத்துவிட்டு ஆந்திராவிற்குத் தப்பியோடியிருந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக சாந்தம்மா அடிக்கடி விக்டோரியா அரசு மருத்துவமனைக்குச் சென்று வந்தபோது, ஜோதிடர் வெங்கடேஷ் அறிமுகமானார். தனது ஆரோக்கியம் குறித்துப் பலன் கேட்ட சாந்தம்மாவிடம், சில நாட்களில் உடல்நலம் சரியாகிவிடும் என்று வெங்கடேஷ் கூறினார். அதன்படியே அவரது உடல்நிலை தேறியதால், சாந்தம்மாவுக்கு ஜோதிடர் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
பின்னர், மகனின் மதுப்பழக்கம் மற்றும் மகளின் திருமணம் குறித்து ஆலோசனை கேட்க வெங்கடேஷைத் தேடி வந்தார். ஆனால் அவர் கிடைக்காததால், ஆட்டோ டிரைவரிடம் தனது செல்போன் எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
பூஜை பெயரில் மோசடி:
சாந்தம்மாவின் போன் எண்ணைப் பெற்ற வெங்கடேஷ், பின்னர் அவரைத் தொடர்புகொண்டு பேட்டராயபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு கூறினார். வீட்டிற்கு வந்தபோது எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து, சௌடேஸ்வரி பூஜை செய்ய வேண்டும் என்றார். வீட்டில் உள்ள நகைகளுக்குப் பூஜை செய்தால் நல்லது நடக்கும் என்றும் நம்ப வைத்தார்.
இதையே முதலீடாக்கிக் கொண்ட குற்றவாளி, ஒவ்வொரு அமாவாசை அன்றும் சாந்தம்மாவின் வீட்டிற்குச் சென்று பூஜையின் பெயரில் நகைகளை வாங்கிச் சென்றார். இப்படி சுமார் ஒரு ஆண்டில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடியாகப் பெற்றுள்ளார்.
AI விடியோ அனுப்பினார்:
ஆகஸ்ட் 19-ந்தேதி வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு சாந்தம்மா தனது நகைகளைத் திருப்பித் தருமாறு வெங்கடேஷிடம் கேட்டார். அப்போது, தான் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் விடியோ தயாரித்து அவருக்கு அனுப்பியுள்ளார்.
விடியோவை அனுப்பிய பிறகு செல்போனை அணைத்துவிட்டுத் தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தம்மா இதுகுறித்து தனது மகளிடம் கூறினார். மகள் அந்த விடியோவை ஆய்வு செய்தபோது, அது AI மூலம் உருவாக்கப்பட்ட போலி விடியோ எனத் தெரிந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த சாந்தம்மா போலீசில் புகார் அளித்தார்.
200 கிராம் நகை பறிமுதல்:
வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய பேட்டராயபுர போலீசார், குற்றவாளி வெங்கடேஷைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














