
நாகர்கோவில்: செப்.30
நாகர்கோவில் அருகே பெண் யூடியூபர் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து 118 பவுன் தங்கநகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 98 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஜபி கார்டன் பகுதியில் ஏலக்காய் வியாபாரி வினோத்குமார் (33), தனது மனைவி மதுமிதா (28) மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். மதுமிதா பிரபல யூடியூபராக உள்ளார். சமீபத்தில் பணம் மற்றும் நகைகளை குவித்து வைத்து, குழந்தைக்கு அவற்றை அபிஷேகம் செய்வது போன்ற வீடியோவை எடுத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி வினோத்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 118 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அன்சுல் நாகர், டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், மதுமிதாவின் வீடு முதல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வரையிலான பகுதிகளில் பதிவான 160 சிசிடிவி கேமரா காட்சிகளையும், பல்வேறு ஆதாரங்களையும் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சின்னத்துரையின் மகன் இசக்கி பாண்டி (30), முக்கூடலைச் சேர்ந்த முருகன் (28) ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இருவரும் கன்னியாகுமரி அருகே எறும்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகேசன் (30), திம்மராஜபுரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி (39) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 4 பேரிடமிருந்து 98 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கைதானவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













