
சென்னை, செப். 29-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாயைத் திறந்து உங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதைவிட, சில சமயங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது” என்று பதிவிட்டுள்ளார். சென்னையில் சி.பா.ஆதித்தனாரின் 122-ஆவது பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அன்றும், இன்றும், என்றும் தவெக எஸ்ஐஆர் திட்டத்தை எதிர்க்கிறது. எஸ்ஐஆரின் முழு செயல்பாடும் மிகப் பெரிய மோசடியாக உள்ளது. தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டுமெனில், எஸ்ஐஆர் முறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் தலைவரின் நிலைப்பாடு. அதே நிலைப்பாட்டில்தான் இன்றும் இருக்கிறோம்” என்றார்.
















