
சென்னை: அக். 14-
ரெயில் பயணத்தின்போது மொபைல்போனில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கானோர் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். நீண்ட தூரப் பயணங்களில் சிலர் செல்போனில் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது, ரீல்ஸ் மற்றும் கேம்களில் ஈடுபடுவது வழக்கம். அவர்களில் சிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்வதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பயணிகள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் செல்போனில் பாடல்கள் கேட்கும்போதும், வீடியோக்களைப் பார்க்கும்போதும் ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்த வேண்டும். தொலைபேசியில் பேசும்போது குறைந்த சத்தத்தில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: ரெயில்கள் மற்றும் நிலையங்களில் சில பயணிகள் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது, கேம் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதுபற்றி பல புகார்கள் வந்துள்ளன என்றார். ஜன விஷ்வாஸ் சட்டம் மற்றும் திருத்தப்பட்ட ரெயில்வே சட்டப் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி, ரூ.1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை டிக்கெட் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப்பிரிவு அலுவலர்கள் வசூலிப்பார்கள். எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தொந்தரவு அளித்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.













