
ஐச்சி-நகோயா (ஜப்பான்), செப். 29- ஆசிய விளையாட்டுப் போட்டியில் டிராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் சீன வீராங்கனையை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நீரு தண்டா, இப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார். ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான தனிநபர் டிராப் ஷூட்டிங், ஐச்சி-நகோயாவில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
இதில் இந்தியாவின் நீரு தண்டா, 30க்கு 28 என்ற கணக்கில் மிகச் சிறந்த துல்லியத்துடன் இலக்கை தாக்கி ஈர்க்கக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட நீரு தண்டா, இறுதிப் போட்டியிலும் தனது துல்லியத்தை அபாரமாக வெளிப்படுத்தினார். இதன்மூலம், பெண்களுக்கான தனிநபர் டிராப் ஷூட்டிங் இறுதிப்போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். 30 வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே தவறவிட்ட நீரு தண்டா, 28 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். சீனாவின் சுன் யுனோங், 30க்கு 26 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார். குவைத்தின் ஹஜார் அப்துல்மாலிக் 30க்கு 21 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். பெண்களுக்கான தனிநபர் டிராப் ஷூட்டிங்கில் தங்கம் வென்றதன் மூலம், இப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றுப் பெருமையை நீரு தண்டா பெற்றுள்ளார். மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டி 2026ல் தனிநபர் பிரிவில் இதுவரை யாரும் தங்கப்பதக்கம் வெல்லாத நிலையில், அந்த குறையையும் இவர் போக்கியுள்ளார். நீரு தண்டா தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 5 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 47 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
















