
ஜப்பான், செப். 29-
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா ராம்ராஜ் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் தேசிய சாதனையும் படைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் மரியம் கரீம் 54.31 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். கஜகஸ்தானின் அடலினா ஜெம்ஸ் 54.58 விநாடிகளில் இலக்கைக் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.கடந்த 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.டி. உஷா, 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 55.42 விநாடிகளில் நிறைவு செய்திருந்தார். இதுவே இந்திய வீராங்கனை ஒருவரின் சிறந்த செயல்திறனாக இருந்து வந்தது. இந்நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். 28 வயதான அவர் தமிழகத்தின் கோவை பகுதியைச் சேர்ந்தவர். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா ராம்ராஜ் வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 4×400 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.தமிழக முதல்-வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த வித்யா ராம்ராஜுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், பி.டி. உஷா 1984-ம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை 42 ஆண்டுகளுக்குப் பின்னர் வித்யா ராம்ராஜ் முறியடித்து புதிய சாதனை படைத்திருப்பது சிறப்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் முதல்-வர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
















