
டெஹ்ரான், செப். 29-
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுவதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து, 108 டாலரை நெருங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடங்கியுள்ளது. அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வது மற்றும் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் முன்வைத்த புதிய முன்மொழிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தையில் அவர்கள் எல்லை மீறிச் செயல்படுகிறார்கள்” என்றார். இருப்பினும், இந்த வார இறுதியில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கப்பல் போக்குவரத்துப் பாதைகள் முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் உடனடி தேவைக்கான கச்சா எண்ணெயைப் பெறுவதற்கான போட்டி அதிகரித்துள்ளது. சவுதி அரேபியா தனது மாற்றுக் குழாய் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளபோதிலும், எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனிடையே, டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமும், அதன் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படக்கூடிய ஆற்றல் தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறு உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் தெளிவான முடிவு எட்டப்படாத வரை, கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
















