
தூத்துக்குடி, அக்.14-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி நேற்று மாலை 4.30 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குரும்பூர் அருகே நல்லூர் ரெயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக சர்வீஸ் ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஸ்டீயரிங் அருகில் இருந்து திடீரென கரும்புகை குபுகுபுவென வெளியேறியது.
இதைக் கவனித்த டிரைவர் தவசிமுத்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்திய அவர், பஸ்சின் இரு தானியங்கி கதவுகளையும் திறந்து விட்டார். பின்னர், பஸ்சில் இருந்த அனைவரையும் உடனடியாக கீழே இறங்குமாறு எச்சரித்தார்.
டிரைவரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பஸ்சில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறியடித்தவாறு வேகமாக கீழே இறங்கினர். பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கிய சில வினாடிகளிலேயே, பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி, பஸ் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, நீண்ட நேரம் போராடி பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின்னர், பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சி அளித்தது.
பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. எனினும், மின்கசிவு காரணமாக பஸ்சில் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் தீப்பிடிப்பதற்கு முன்பே கீழே இறங்கியதால், அவர்கள் உயிர் தப்பினர்.













