
பெங்களூரு, அக். 14-
கர்நாடக மாநிலம் பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நியூதரகுபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடியில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி திருட்டு நடந்தது. அன்றைய தினம் இரவு, மர்ம நபர்கள் அங்காடியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 250 கிலோ பாதாம் பருப்பு, 10 கிலோ பிஸ்தா பருப்பு, 10 கிலோ முந்திரி பருப்பு, 10 கிலோ பெரிய பாதாம் பருப்பு மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.இதேபோல், மைசூரு டவுன் பழைய சந்தேபேட்டே பகுதியில் அமைந்துள்ள மற்றொரு பல்பொருள் அங்காடியிலும் திருட்டு நடைபெற்றது. இரு சம்பவங்கள் குறித்தும் வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில், திருட்டில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் காரில் சென்று பல்பொருள் அங்காடியில் இருந்து பாதாம் பருப்பு உள்ளிட்ட உலர் பழவகைகள் மற்றும் பணத்தை திருடியதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 90 கிலோ ஏலக்காய், 228 கிலோ பாதாம் பருப்பு, 25 கிலோ முந்திரி பருப்பு ஆகியவற்றையும், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் காரின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 11 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.














