
திருமலை: அக். 14-
திருமலையிலும் எல் நினோ பாதிப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உஷ்ணநிலை அதிகரித்து வருவதுடன், போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டு தண்ணீர் இருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
திருமலையில் பக்தர்களுக்காக தினமும் 7,500 வாடகை அறைகள் வழங்கப்படுகின்றன. மேலும், 5 பிஏசி சத்திரங்களும், பொது கழிவறைகளும் உள்ளன. இதனால் திருமலையில் தினமும் சுமார் 60 லட்சம் கன அடி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தேவைக்காக பாபவிநாசம் அணையில் இருந்து 15 லட்சம் கன அடி தண்ணீரும், கோகர்பம் அணையில் இருந்து 15 லட்சம் கன அடி தண்ணீரும் திருமலைக்கு அனுப்பப்படுகின்றன. திருப்பதியில் உள்ள கல்யாணி அணையில் இருந்து 30 லட்சம் கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு மொத்தம் 60 லட்சம் கன அடி தண்ணீர் திருமலைக்கு கொண்டு வரப்படுகிறது.
திருமலையில் உள்ள பாபவிநாசம், ஆகாச கங்கை, கோகர்பம் அணை, குமாரதாரா, பசுபுதாரா ஆகிய நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. இவற்றில் குமாரதாரா மற்றும் பசுபுதாரா அணைகளில் தண்ணீர் பெருமளவில் வற்றிவிட்டது. தற்போது கோகர்பம் மற்றும் பாபவிநாசம் அணைகளில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளில் உள்ள தண்ணீரும் இன்னும் 90 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என நீர்வளத் துறையினர் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். திருமலையின் தினசரி தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில், போதிய மழையின்மையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.













