Home மாவட்டங்கள் பெங்களூர் கார் விபத்து – பிஜேபி பிரமுகர் பலி: 3 பேர் காயம்

கார் விபத்து – பிஜேபி பிரமுகர் பலி: 3 பேர் காயம்

பெங்களூரு, அக். 14-
லாரியை முந்திச் செல்ல முயன்றபோது ரேஞ்ச் ரோவர் கார் பலமாக மோதிய விபத்தில் மாலூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; அவருடன் இருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையின் ராணி கிராஸ் அருகே நேற்று இரவு இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மாலூரைச் சேர்ந்த பாஜக பிரமுகரான சிவகுமார் (50), தனது நண்பர்களான சந்தன், பிரதீப் மற்றும் வினோத்குமார் ஆகியோருடன் சித்ரதுர்காவிலிருந்து மாலூருக்கு ரேஞ்ச் ரோவர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ஹோஸ்கோட்டே – தாபஸ்பேட்டை ரிங் ரோடு நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற காஸ் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக லாரியின் பின்புறம் மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன் பகுதி நொறுங்கி நஜ்ஜுநூறானதில் பலத்த காயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் சவாரியும் பலி
இதேபோல், தொட்டபள்ளாப்பூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வர்தேனஹள்ளி அருகே வேணுகோபால் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து கீழே சரிந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தொட்டபள்ளாப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.