
இஸ்லாமாபாத், அக். 15-
பாகிஸ்தானில் கடந்த ஓராண்டில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 15 லட்சம் குழந்தைகள் இணையதளம் வழியாக பாலியல் சுரண்டல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக யுனிசெப் மற்றும் இன்டர்போல் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையதளம் மனிதர்களின் அன்றாடத் தேவையாக மாறியுள்ள நிலையில், சிறுவர், சிறுமிகளுக்கு அது ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆய்வின்படி, பதிவான சம்பவங்களில் 85 சதவீதத்தில் குழந்தைகளுக்கு அறிமுகமானவர்களே பாலியல் சுரண்டல் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டுள்ளனர். 44 சதவீத பாதிப்புகள் சமூக வலைதளங்கள் மூலமாகவே நிகழ்ந்துள்ளன. அவமானம் மற்றும் பயம் காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















